Wednesday, September 2, 2009

நகரத்தான் குறிப்புகள்

எனக்குப் பொழுது போக வேண்டுமே

என்றேன்

நீயும் உன் சிலாங்குமென

தலையிலடித்துக் கொண்டாள்

இனிதான்

“ஜஸ்ட் ஃபார் டைம் பாஸ்”

பழக வேண்டும்

O

நெல்லை நிச‌ன்தான்லே

ம‌துரை ஆமாடி மாப்ளே

கோவை ஆமாங்

இதுவ‌ரை என‌க்குத் தெரிந்த‌து

எதிரில் நிற்கும்

எஸ் சாரை எதில்

சேர்ப்ப‌து?

O

ந‌க‌ர‌த்து அவ‌ல‌ம் குறித்து

எழுதிக் கொன்டிருந்தேன்

கீழே ஒரு நூறு ரூபாய் கிட‌ந்த‌து.

க‌விதை ஐந்து நிமிட‌ம் க‌ழித்து தொடர்ந்த‌து.

O

த‌ற்கொலை செய்து கொள்வ‌தற்காய்

மூன்று மணி நேர‌ம்

மின்க‌ம்ப‌ம் மேல்நின்ற‌வ‌ன்

காப்ப‌ற்ற‌ப்பட்டான்

நாங்க‌ள் வ‌ருத்த‌த்துட‌ன் திரும்பி வ‌ந்தோம்

o

க‌ன்ன‌ம் கிள்ளி

விளையாடிக்கொண்டிருந்த‌து குழ‌ந்தை

க‌ண் பார்த்து சிரித்தாள்

பெண்ணொருத்தி

ம‌ஞ்ச‌ன‌த்தி ம‌ர‌ம்மேல்

பொழிந்துகொண்டிருந்த‌து ம‌ழை

கீழே கிட‌ந்த‌ நூறுருபாய்

ம‌ட்டும் எடுத்துக்கொண்டு ர‌யிலேறினேன்

O

அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள்

எல்லா அறைக்கும் மின்விசிறி

ஏ.சி கார் பார்க்கிங்

இன்னும் என்னவெல்லாமோ…

பின் கலைத்துவிட்டு

குடிசைக்குள் உணவருந்தப் போனார்கள்.

OoO

நன்றி உயிரோசை

[Via http://silarojakkal.wordpress.com]

No comments:

Post a Comment